இரு வாரங்களுக்கு முன்னால் துக்ளக் வார இதழில் சந்திரன் என்னும் கட்டுரையாளர் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமை தேவை என்று ஒரு சிறு பிள்ளைத்தனமான ஒரு கட்டுரையினை எழுதியுள்ளார் . இவரின் பல கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.
இந்த குறிப்பிட்ட கட்டுரையில் மாணவர்களை கண்டிப்புடன் நடத்தினால் மட்டுமே நாளைய சமுதாயம் சிறப்பானதாக அமையுமென்றும் தன் எழுத்திற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் .
முதலில் கண்டிப்பு என்றால் என்னவென்று கட்டுரையாளர் விளக்க வேண்டும். ஏதோ கிடைத்த வார்த்தைகளை எழுதி பக்கத்தை நிரப்ப கூடாது. கண்டிப்பு என்றால் தவறு செய்தவர்களிடம் அதை சுட்டி காட்டி அதனுடைய பாதிப்பை அவர்கள் அறிய செய்வது. அதை விட்டு விட்டு மாணவர்களின் தோலை உரிப்பது கண்டிப்பகாது. மாணவர்களை அடிப்பது காட்டுமிராண்டித்தனம். அது பெற்றோர் ஆனாலும் சரி . ஆசிரியர் ஆனாலும் சரி. யாரையும் யாரும் அடிபதற்கு உரிமை கிடையாது. மாணவர்களை சொல்லால் திருத்த கூட பொறுமை இல்லாதவர்கள் எதற்கு ஆசிரிய பணிக்கு வர வேண்டும்?
கட்டுரையாளர் ஒன்டரி தெரிந்து கொள்ளட்டும். இன்றைய தலை முறை மாணவர்கள் ஆசிரியர்களை விட சிறப்பாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆசிரியர்கள் மிக மிக குறைவு.கட்டுரையாளரின் கருத்துக்கள் சிரிப்பைதான் தருகின்றன. அந்த காலத்தில் எல்லாம் தவறு செய்தால் திட்டுவார்கள் , அடிப்பார்கள் என்ற பயம் இருந்ததாம். அதனால் அன்றைய தலைமுறை மாணவர்களிடம் ஒழுக்கம் இருந்ததாம். உளருவதற்கும் ஒரு அளவு வேண்டாமா சந்திரன்.
அன்றைய தலைமுறை மாணவர்கள்தானே இன்று அதிகாரிகளாகவும் மந்திரிகளாகவும் இருக்கின்றனர்.
ஆனாலும் ஊழலும் லஞ்சமும் தானே அவர்களின் முகவரி...அது ஏன் ?
அன்று பெற்றோர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமாக வேண்டும் என்று விரும்பினார்களாம். அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தார்களாம். அடித்தால் ஒழுக்கம் வந்து விடுமா? இப்படி எழுத வெட்கமாக இல்லை.? அன்றைய சமூகத்தில் ஆண்களிடம் ஒழுக்கம் அதிகம் இருந்ததாம். சந்திரன், இன்று பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் பலர் ஐம்பது வயதை கடந்தவர்கள். அதாவது தோலை உரித்து வளர்க்கப்பட்ட அந்நாளைய ஒழுக்க சீலர்கள் ..இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
ஆசிரியர்களிடம் வருவோம். இன்றைக்கு ஆசிரியர்களாக பணி புரிபவர்களில் பலர் வேறு எதுவுமே கிடைக்காத காரணத்தினால் இந்த பணிக்கு வந்தவர்கள். ஆசிரிய பணிக்காகவே தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள் மிக மிக சொற்பம். தகுதியான ஆசிரியர்கள் வெகு சிலரே. இப்படி ஆசிரியர்களே இப்படி இருக்க மாணவ சமுதாயத்தை குறை சொல்வதில் என்ன பயன்?
கட்டுரையாளர் மேலும் சில புரட்சிகரமான கருத்துக்கக்களை கூறி இருக்கிறார். அதாவது சுதந்திர போராட்ட காலத்திலே பல வன்முறைகளை ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்து விட்ட போதும் இந்திய சமூகம் கட்டுபாடுடன் இருந்ததாம். இதற்கு காரணம் மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டதுதான் காரணமாம். சரி! அதற்கு பின் வந்த தலை முறையினர்? அவர்களில் பலர்தானே இன்று நம் நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர்..
இன்றைய மாணவர்கள் இரவு விடுதிகளுக்கு செல்கின்றார்களாம். அதனால் சமூகம் சீரழிந்து விடுமாம். கட்டுரையாளர் முதலில் இது போன்ற இடங்களில் சென்று காணட்டும். நாற்பது வயதை கடந்த ஒழுக்க சீலர்களை அங்கே காணட்டும். முதலில் குழந்தை பிறந்த உடன் சாப்ட்வேர் துறைதான் அதன் எதிர்காலம் என்று முடிவு கட்டும் பெற்றோர்கள் மாறட்டும் .மதிப்பெண் மட்டுமே வாழ்கையின் குறிக்கோள் என்று போதிக்கும் ஆசிரியர்கள் மாறட்டும் . விருப்பத்துடனும் , ஆசிரியப்பணி அறப்பணி என்று என்னும் ஆசிரியர்கள் உருவாகட்டும். பின்னர் , தோலை உரிக்கலாம் . வாலை முறுக்கலாம்.
அஸ்திவாரமே சரியில்லை . அதை விட்டுவிட்டு கட்டிடத்தை குறை கூற வேண்டியது. முதலில் கல்வி முறை மாறட்டும். பின் மாணவ சமுதாயம் மாறும்.