Monday, October 31, 2011

என்றென்றும் ராஜா... இளையராஜா ...-பகுதி ஒன்று

இளையராஜா...... இந்த சொல்லுக்கு மயங்காத தமிழ்நாட்டு மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்....
அவர் இசை தரும் போதை ...... என்னது? போதையா?  என்று கேட்கலாம். 

ஆம். அந்த இசையை ரசிப்பதற்கு பல நிலைகள் உள்ளன..... அதில், கொஞ்சம் முற்றிய நிலை இந்த போதை.... ஒரு பூச்செடியின் மேல் அமர்ந்து தேனை ரசித்த வண்டு . மீண்டும் மீண்டும் அந்த பூவிலே அமருமாம். அந்த மாதிரியான போதை , இளையராஜாவின் இசை என்னும் போதை. 

எண்பதுகளில் தொடங்கி இன்று வரை நீண்டு நிற்கும் ஒரு மாபெரும் இசை தொகுப்பு அவர்.
இசையை பற்றி நுட்பமான விவரம் இல்லாதவராக இருப்பினும் சரி, இசையில் நுண்மான் நுழைபுலம் பெற்றவராக இருந்தாலும் சரி, இளையராஜாவின் இசையை கடக்காமல் அடுத்த கட்டத்தை செல்ல முடியாது.

ஒரு பாடலுக்கான இசையை அமைப்பதிலாகட்டும், இசைக்கருவிகளை தேர்வு செய்வதிலாகட்டும், அவற்றின் அமைவுகளை தீர்மானிப்பதிலாகட்டும், அவருக்கு நிகர் அவர்தான்.....

கிராமிய இசையில் தொடங்கி, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வேறு வகையான இசை வகைகளையும் சாமானியனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே...

சில கர்நாடக இசை ராகங்களை அவர் கையாண்டுள்ள விதம் பிரம்மிக்க வைக்கின்றது...




மேலே இருக்கும் காணொளியில் இருக்கும் பாடல் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

இது ஹம்சத்வனி என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்...

பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் இசைகோர்ப்பில் வரும் தாள கதியே பாடலுக்கான ஒரு உணர்ச்சியை கொடுக்கும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் குழல் இசையில் தாளத்தின் போக்கு திஸ்ரம் எனப்படும் மூன்று மாத்திரைகளை கொண்ட தாள அமைப்பை கொண்டு பாடலுக்கான போக்கினை தெரிவு செய்கின்றது... குழல் இசை தொடங்கும் பொழுது, முன்பு இசைத்த கிடார் திஸ்ரம் கீழ் காலத்தில் இருக்க, டிரம்ஸ் துரித கதியில் இசைக்கபடுகின்றது. குழலினை தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோர்ப்பு  பாடலின் அழகை பன்மடங்கு பெருக்குகின்றது.....


மயிலே மயிலே  உன் தோகை எங்கே என்கின்ற முதல் வரியின் ஸ்வர அமைப்பு ஹம்சத்வனி ராக சாயலை அழகுடன் கொணர்கின்றது. மிருதங்கம் மிக மிக அழகாக இந்த பல்லவியில் இசைக்கப்படுவதை நாம் கேட்கலாம்.
பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையில் வரும் அழகான ஸ்வர பிரயோகங்கள் கிடார் இசையில் தெவிட்டாத தேனாக..... தொடர்ந்து வரும் வயலின் சஞ்சாரங்கள், முடிவில் குழலிசை அழகாக பாடகர் தொடங்கும் இடத்தில் பளிச்சென்று முடிகின்றது.....  முதல் சரணத்தின் தொடக்கத்தில்.... தென்றல் தாலாட்ட தென்னை இருக்க என்ற வரியில், இருக்க , ரி ச நி என்ற அமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டு திரு. பாலசுப்ரமணியம் அவர்களால் தென்றல் தாலாட்டுவது போல் பாடப்பட்டும் இருக்கின்றது. அடுத்த வரியின் நீளம் அழகான அளவில் குறைக்கப்பட அது அந்த தாளத்தின் அழகை இரு மடங்காக ஆக்குகின்றது. திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் மிருதங்கம் இன்னொரு மெல்லிசை கருவி போல் பாடல் முழுவதும் படர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையில் வயலினின் அழகிய ஆக்கிரமிப்பு...

இந்த ஹம்சத்வனி கர்நாடக இன்னிசை நிகழ்சிகளில் பெரும்பாலும் முதலில் இசைக்கப்படும் ஒரு ராகமாகும்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் தந்தை ராமஸ்வாமி தீட்சிதர்  உருவாக்கியதே இந்த ஹம்சத்வனி ராகமாகும்.

இதனை பொதுவாக சங்கராபரணம் என்ற ராகத்தில் இருந்து பிறந்தது என்று கூறினாலும் , இதில் இசைக்கபடுகின்ற பிரயோகங்கள் மற்றும்  விதம் இவை அனைத்தையும் பார்த்தல்  இந்த ராகத்தின்
தாய் கல்யாணி ராகம் என்றே தோன்றுகின்றது.


இளையராஜா அவர்கள் ஹம்சத்வனி ராகத்தில் இசை அமைத்த பாடல்களை கேட்கும் பொழுது , ம என்கின்ற ஸ்வரம் மிக நுண்ணியமாக கேட்கும்... ஆம், அந்த ஸ்வரம் கல்யாணி ராகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்வரம்...
அவரின் இசை ஆளுமை மிகப்பெரியது... அதில் ஒரு பகுதியாவது நம்மால் புரிந்து கொள்ளள முடிகின்றதா என்று பார்ப்போம் ......

ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரு இளையராஜா.......


Thursday, March 17, 2011

கண்டிக்கும் உரிமையும், கல்வி நிலைமையும்

துக்ளக் இதழில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை

இரு வாரங்களுக்கு முன்னால் துக்ளக் வார இதழில் சந்திரன் என்னும் கட்டுரையாளர் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமை தேவை என்று ஒரு சிறு பிள்ளைத்தனமான ஒரு கட்டுரையினை எழுதியுள்ளார் . இவரின் பல கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.

இந்த குறிப்பிட்ட கட்டுரையில் மாணவர்களை கண்டிப்புடன் நடத்தினால் மட்டுமே நாளைய சமுதாயம் சிறப்பானதாக அமையுமென்றும் தன் எழுத்திற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் .
முதலில் கண்டிப்பு என்றால் என்னவென்று கட்டுரையாளர் விளக்க வேண்டும். ஏதோ கிடைத்த வார்த்தைகளை எழுதி பக்கத்தை நிரப்ப கூடாது. கண்டிப்பு என்றால் தவறு செய்தவர்களிடம் அதை சுட்டி காட்டி அதனுடைய பாதிப்பை அவர்கள் அறிய செய்வது. அதை விட்டு விட்டு மாணவர்களின் தோலை உரிப்பது கண்டிப்பகாது. மாணவர்களை அடிப்பது காட்டுமிராண்டித்தனம். அது பெற்றோர் ஆனாலும் சரி . ஆசிரியர் ஆனாலும் சரி. யாரையும் யாரும் அடிபதற்கு உரிமை கிடையாது. மாணவர்களை சொல்லால் திருத்த கூட பொறுமை இல்லாதவர்கள் எதற்கு ஆசிரிய பணிக்கு வர வேண்டும்?
கட்டுரையாளர் ஒன்டரி தெரிந்து கொள்ளட்டும். இன்றைய தலை முறை மாணவர்கள் ஆசிரியர்களை விட சிறப்பாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆசிரியர்கள் மிக மிக குறைவு.கட்டுரையாளரின் கருத்துக்கள் சிரிப்பைதான் தருகின்றன. அந்த காலத்தில் எல்லாம் தவறு செய்தால் திட்டுவார்கள் , அடிப்பார்கள் என்ற பயம் இருந்ததாம். அதனால் அன்றைய தலைமுறை மாணவர்களிடம் ஒழுக்கம் இருந்ததாம். உளருவதற்கும் ஒரு அளவு வேண்டாமா சந்திரன்.
அன்றைய தலைமுறை மாணவர்கள்தானே இன்று அதிகாரிகளாகவும் மந்திரிகளாகவும் இருக்கின்றனர்.
ஆனாலும் ஊழலும் லஞ்சமும் தானே அவர்களின் முகவரி...அது ஏன் ?

அன்று பெற்றோர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமாக வேண்டும் என்று விரும்பினார்களாம். அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தார்களாம். அடித்தால் ஒழுக்கம் வந்து விடுமா? இப்படி எழுத வெட்கமாக இல்லை.? அன்றைய சமூகத்தில் ஆண்களிடம் ஒழுக்கம் அதிகம் இருந்ததாம். சந்திரன், இன்று பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் பலர் ஐம்பது வயதை கடந்தவர்கள். அதாவது தோலை உரித்து வளர்க்கப்பட்ட அந்நாளைய ஒழுக்க சீலர்கள் ..இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
ஆசிரியர்களிடம் வருவோம். இன்றைக்கு ஆசிரியர்களாக பணி புரிபவர்களில் பலர் வேறு எதுவுமே கிடைக்காத காரணத்தினால் இந்த பணிக்கு வந்தவர்கள். ஆசிரிய பணிக்காகவே தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள் மிக மிக சொற்பம். தகுதியான ஆசிரியர்கள் வெகு சிலரே. இப்படி ஆசிரியர்களே இப்படி இருக்க மாணவ சமுதாயத்தை குறை சொல்வதில் என்ன பயன்?
கட்டுரையாளர் மேலும் சில புரட்சிகரமான கருத்துக்கக்களை கூறி இருக்கிறார். அதாவது சுதந்திர போராட்ட காலத்திலே பல வன்முறைகளை ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்து விட்ட போதும் இந்திய சமூகம் கட்டுபாடுடன் இருந்ததாம். இதற்கு காரணம் மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டதுதான் காரணமாம். சரி! அதற்கு பின் வந்த தலை முறையினர்? அவர்களில் பலர்தானே இன்று நம் நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர்..

இன்றைய மாணவர்கள் இரவு விடுதிகளுக்கு செல்கின்றார்களாம். அதனால் சமூகம் சீரழிந்து விடுமாம். கட்டுரையாளர் முதலில் இது போன்ற இடங்களில் சென்று காணட்டும். நாற்பது வயதை கடந்த ஒழுக்க சீலர்களை அங்கே காணட்டும். முதலில் குழந்தை பிறந்த உடன் சாப்ட்வேர் துறைதான் அதன் எதிர்காலம் என்று முடிவு கட்டும் பெற்றோர்கள் மாறட்டும் .மதிப்பெண் மட்டுமே வாழ்கையின் குறிக்கோள் என்று போதிக்கும் ஆசிரியர்கள் மாறட்டும் . விருப்பத்துடனும் , ஆசிரியப்பணி அறப்பணி என்று என்னும் ஆசிரியர்கள் உருவாகட்டும். பின்னர் , தோலை உரிக்கலாம் . வாலை முறுக்கலாம்.

அஸ்திவாரமே சரியில்லை . அதை விட்டுவிட்டு கட்டிடத்தை குறை கூற வேண்டியது. முதலில் கல்வி முறை மாறட்டும். பின் மாணவ சமுதாயம் மாறும்.