Monday, March 23, 2015

இசையின் புன்னகை --மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

” இன்னைக்கு யார் கச்சேரிக்குப் போற?
அகாடமில மாண்டலின் வாசிக்கறார்….. அதுக்கு போறேன்….
ஆனால், யார் வாசிக்கறா? என்ற கேள்வி யாரும் கேட்டதில்லை.
மாண்டலின் என்றாலே ஸ்ரீனிவாஸ்தானே எல்லோருக்கும்….
1993 என்று நினைவு…. முதன் முதலில் அப்பா வாங்கி வந்த ஒரு ஒலி நாடா…. மாண்டலின் என்ற எழுத்து பெரியதாயும், நெற்றியில் சிறியதாய் இட்ட திருநீற்றுடன் அப்பா கூறிய தெய்வீக புன்னகை முகம் கொண்ட அவரின் புகைப்படம்.
. கன்யாகுமாரி அவர்கள் வயலின், வலங்கைமான் ஷண்முகசுந்தரம் அவர்கள் தவில்…. ஒரு ஹம்சத்வனி ஆலாபனை. அதில் தொடங்கிற்று அவரின் இசை மீது ஒரு மோகம்…… அதில் அவர் வாசித்திருந்த பிலஹரியும் கதனகுதூகலமும் ப்ரமிக்க வைத்தன.

2001 ல் இசை பயில்வதற்காய் சென்னை கலாஷேத்ரா….. என் பெரியப்பாவான வித்வான் திருவெண்காடு ஜெயராமன் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். காஞ்சி சங்கர மடத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக பெரியப்பாவுடன் சென்றேன். மடத்தின் வாயிலில் காரை விட்டு இறங்கியதுமே ஒரு உருவம் பெரியப்பாவிடம் ஆசி பெற குனிந்து,. மாமா! ஆசிர்வாதம் பண்ணனும்… என்றது.  பெரியப்பா உடனே,மஹராஜனா இருப்பா! என்றார்.  நான் அப்பொழுதுதான் அவரை யார் என்று பார்த்தேன்….. அந்த புன்னகை …. அது , அவர் மாண்டலின் என்று சொன்னது….
(மாண்டலின் அவருக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்ல…. லட்சகணக்கான இசை ரசிர்களுக்கும் அதுவே உண்மை.) 

அன்று அவர் வாசித்த சங்கராசார்யம். அன்று அவர் வாசித்த ராக ஆலாபனை… அந்த இசைத் தந்திகளின் குழைவு….. அந்த ராக பாவம்…. அந்த க்ருதியின் அத்தனை பாவங்களும் அன்று வெளிப்பட்டன. சாஹித்ய பாவம் என்பார்கள்…. அதை இசைக் கருவியிலே அவர் வெளிப்படுத்திய விதம் அலாதி. அன்று அவர் வாசித்த விதத்தில் அங்கிருந்த அனைத்து வித்வான்களும் மெய் மறந்தார்கள். திரும்பி வரும் பொழுது பெரியப்பா சொன்னார்.  இந்த அனாயாசம் வரணும்னா தபஸ் பண்ணனும்.   

2003 ல் டிசம்பர் மாதம் கலாஷேத்ராவில் அவருடைய கச்சேரி…… கலாஷேத்ராவில்  அன்று அவர் வாசித்த ஆபேரி, தேவமனோஹரி, குண்டக்ரியா அவரின் மேதமைக்கு சாட்சி. குறிப்பாக ஆபேரி ராகத்தில் அவர் வாசித்த சில பிடிகள் யாரிடமும் நான் கேட்காதது. அது அவருக்கென்று இறைவன் அளித்த வரம்.  நிகழ்ச்சியின் இறுதியாக அவர் வாசித்தது மாண்டு தில்லானா. அன்று, ரசிகர்கள் மத்தியில் இசை மேதை லால்குடி அவர்கள் அமர்ந்திருந்தார். அன்று கச்சேரி முடிந்தவுடன் லால்குடி அவர்கள் மாண்டலின் அவர்களிடம், ஸ்ரீனிவாஸ், அந்த மாண்டு உன் சொத்து என்றார்
ஆனால், அன்று இசை பயில தொடங்கிய மாணவன் போல, சார், ஏதாவது தப்பா இருந்தா மன்னிக்கனும் சார் என்று கூறினார் ஸ்ரீனிவாஸ்
அதன் பின்னர் ஏராளமான கச்சேரிகள் கேட்க வாய்த்தது. அவருடைய இல்லத்திற்கும் சில முறை சென்று உரையாட வாய்ப்பு கிடைத்தது.
கச்சேரிகளில் ரசிகர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வித்வான்கள் ஒரு ரகம். தனக்கும் ரசிகர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் கச்சேரி நிகழ்த்துபவர்கள் ஒரு ரகம். தான் இசைத்து ரசிகர்களையும் உடன் இசையில் பயணிக்க வைக்கும் வித்வான்கள் வெகு சிலர். ஸ்ரீனிவாஸ் அவர்களோ, ரசிகர்களை தாங்களே ஸ்ரீனிவாஸ் என்று எண்ண வைக்கும் ரகம்.
அவருடன் ராக ஆலாபனைகளில் பயணிப்பதென்பது ஒரு சுகானுபவம். மந்த்ர ஸ்தாயிகளில் அதிர்ந்து, மத்ய ஸ்தாயிகளில் தென்றலாய் பயணித்து, தார ஸ்தாயிகளில் ராகத்தின் உச்சம் தொட்டு, இரண்டாம் காலத்தில் ஒரு அசுர பயணமொன்றை நிகழ்த்தும் அனுபவம். ஆனால் தான் ஒன்றுமே செய்யாதது போல் பால் மணம் மாறாப் புன்னகை ஒன்றினை உதிர்த்து நம்மை மெய் சிலிர்க்க வைப்பார். அதையெல்லாம் விட தந்தியினை ஒரே முறை மீட்டி, அவர் ஸ்தாயிகளை கடந்து செல்லும் லாவகம், அப்போதும் பக்க வாத்ய கலைஙர்களை பார்த்து , பலே என்று சொல்லி ஒரு புன்னகை. அது அவருக்கு மட்டுமே சாத்யம். ரசிகர்களெல்லாம் ப்ரமித்து அமர்ந்திருப்போம். இது போன்று எத்தனையோ தருணங்கள். அசாத்தியமான பிடிகளையும், மிகக் கடினமான ஸ்வரக் கோர்வைகளையும் வாசிக்கும் தருணங்களில் கூட அந்தப் புன்னகை.


2004 ஆம் ஆண்டு திருவையாறு த்யாகராஜ ஸ்வாமிகள் ஆராதனையின் போது, அவர் வாசித்த  நளினகாந்தி ராகம் ஆண்டுகள் பலவானாலும் இன்றும் காவிரிக் கரையினில் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆம்….. ஒவ்வொரு முறையும் நான் திருவையாறு செல்லும் பொழுதெல்லாம் அந்த நளினகாந்தி அந்த நதியின் நளினத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும்.
2005 ஆம் வருடம் NDTV walk the talk  என்ற நிகழ்ச்சியில் அவர் விருந்தினர். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கலாக்‌ஷேத்ராவில் நடைபெற்றது. அவர் எங்களுடன் அமர்ந்து உரையாடி அந்த பேட்டியை அளித்தார். அவரை வாசிக்க சொல்லி  நிகழ்ச்சி தொகுப்பாளர் சேகர் குப்தா கேட்டுக் கொண்ட பொழுது, அவர் எங்களையும் உடன் பாட வேண்டும் என்று கூறி, ஸ்ரீ ராகத்தில் அமைந்த ஆதி தாள வர்ணத்தை இசைத்தார். எங்கள் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவம் அது.

சொல்லில் அடங்கா பெரும் ப்ரவாஹம் அவரது இசை.கால்த்தையும் கடந்து நிற்கும் அவரது மேன்மை. எல்லாவற்றையும் விட, அவரிடம் அனைவரும் வியப்பது அவரது எளிமை.

இப்பொழுதும் திருவையாற்றின் காவிரிக் கரையினில் த்யாகராஜ  ஸ்வாமிகளின் சமாதிக்கு வெளியில் காவிரிக்கரையின் அருகில் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து  அவர் கமனஸ்ரம ராகத்தில் ராகம் தானம் பல்லவி இசைத்த குறுந்தகட்டினை கேட்டவாறே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்றேன். காவிரியில் தண்ணீர் குறைவு. மணல் வெளியில் சிறிது நேரம் நின்றவாறு மேற்கே நோக்குகின்றேன். தொலைவில் பறவைகள் கூடு திரும்புகின்றன். அந்தி மயங்கிய வேளையில் அந்த கமனச்ரம ஆன்மாவை துளைக்கின்றது.  கண்களில் கண்ணீர் நிற்கவில்லை. அவர் இல்லை என்பதை மனம் ஒப்ப மறுக்கின்றது. விதிதான் எவ்வளவு குரூரமானது. ஆனாலும் ஒன்று மட்டும்  நிதர்சனம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் இசை நம்முடன் இருக்கும். அந்தப் புன்னகையும்.

ஏனென்றால் அது இசையின் புன்னகை…….. :)



No comments:

Post a Comment