Sunday, March 4, 2012

விஜயநகரம் - வெற்றியின் சாம்ராஜ்யம்

காலப்பெருவெளியில், வரலாற்று வழித்தடத்தில் ஒரு மிகப்பெரும் பண்பாட்டுக் கூறினை உள்ளடக்கியது நம் நாடு. எத்தனையோ பெரும் சாம்ராஜ்யங்கள் இம்மண்ணில் விளைந்து, கிளர்ந்து, வளர்ந்து, தளர்ந்து ,வீழ்ந்துள்ளன.

தோன்றிய சாம்ராஜ்யங்கள் பலவற்றுள், மிகச்சிலவே சரித்திரத்தின் போக்கை மாற்றியுள்ளன.  நம், தென்னிந்தியாவின் அரசியல், சமூக, கலை வரலாற்றினை மாற்றி அமைத்த சாம்ராஜ்யம் , விஜயநகர சாம்ராஜ்யம். 

ஆம். அன்னியர் படையெடுப்பை துங்கபத்ர நதிக்கரையில் நிறுத்தி , நம் தென்னிந்திய கலாசாரத்தை நிலை நிறுத்திய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு கலை வரலாறு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. 

இன்று, எண்ணற்ற கோயில்கள், அரண்மனைகள், மாளிகைகள், நினைவுச்சின்னகள் என்று காண்போரை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அழைத்துச்செல்லும் எழில் நகரம் நம் விஜயநகரம். 

ஹம்பி என்று சொன்னால்தான் அனைவரும் அறிவர். துங்கபத்ரை நதிக்கரையில் இயற்கை அன்னை தாலாட்ட, வரலாறு செறிவூட்ட நிற்கும் நகரம் இது. 

எங்கு நோக்கினும் சக்தியடா என்றான் முண்டாசுக்கவி... எங்கு நோக்கினும் கற்றளிகளடா ... என்றுதான் பாட வேண்டும் ஹம்பி சென்றால் ......



மூன்று நூற்றாண்டுகள் தென்னிந்தியாவின் மணிமகுடமாய் நின்ற இந்நகரம் இன்றும் தோற்றப்பொலிவு குறையாமல் நம் கண் முன் வரலாறு கூறி நிற்கின்றது. 

இங்கு இருமுறை சென்ற பெருமகிழ்ச்சியின் விளைவே இந்தப்பதிவு. பல பதிவுகளாக இது தொடரும்.

எங்கு நோக்கினும் குன்றுகள் . அதன் மேல் மணிமகுடமாய் மண்டபமோ, தோரணவாயிலோ, மண்டபமோ நிற்கும்.

நகரத்தின் வரலாற்று ரகசியங்களை அறிந்த ஒரே சாட்சி துங்கபத்ரை நதி. 
அதன் எழிலை, கம்பீரத்தை,பெருக்கை, ஆயிரம் கண் பார்வைகளாலும் அளந்திட முடியாது. 

நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், வாழைத்தோப்புகளும், சிற்றோடைகளும் கொண்ட நகரம் ஹம்பி. பறவைகளும், விலங்குகளும், சற்று கர்வத்துடனேயே வாழ்கின்ற மண் இது. 

வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், தொல்லியல் அறிஞர்களுக்கும் , இந்த நகரம் ஒரு புதையல் .இங்கு ஒவ்வொன்றினையும் தனித்தனியான வடிவமாக பார்த்து அறிவதே இந்த அறிஞர்கள் பணியாக கடந்த அரை நூற்றாண்டாக இருந்து வருகின்றது. 

ஆனால், இந்த நகரத்தை முழுமையாக பார்த்து உணர்வது ஆராய்ச்சியல்ல. அது ஒரு பெரும்தவம். 
அந்தி மயங்கும் மாலை பொழுதில் துங்கபத்ரை நதிக்கரையில் சலசலக்கும் நீரின் ஓசையை உள்மனத்தில் இருத்தினால் நாம் ஐநூறு வருடங்களுக்கு முன் சென்று நிற்போம் . 
இந்த நகரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது ஒரு தவமே...

தவம் தொடரும் ...


No comments:

Post a Comment